Description
“உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்நூலாசிரியர் நேரடி பயணம் சென்று அங்குள்ள அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டு அவற்றுள் கவனத்தை ஈர்த்த, மாறுபட்ட தகவல்களை வழங்கக்கூடிய அருங்காட்சியகங்கள் பற்றிய தகவல்களை முதல் இரண்டு தொகுதிகளில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தத் தொகுதியை சற்றே மாறுபட்ட வகையில் இரண்டு பகுதிகளாக தொகுத்துள்ளார்.
முதல் பகுதியில் பத்து வெவ்வேறு நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றிய தகவல்களை வழங்கியிருக்கிறார். நூலின் இரண்டாம் பகுதியில் ஜெர்மனியில் மட்டுமே உள்ள அருங்காட்சியகங்களில் பத்து அருங்காட்சியகங்கள் பற்றி விவரித்திருக்கிறார்.
குறிப்பாக ஜெர்மனியில் 6200 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்பது நமக்கு வியப்பளிக்கும் தகவல். அவற்றுள் 600 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை நேரடியாக சென்று ஆசிரியர் பார்த்திருந்தாலும், அவர் குறித்து வைத்திருந்த தகவல்களைக் கொண்டு பத்து கட்டுரைகளை இரண்டாம் பகுதியில் வழங்கி ஜெர்மனியின் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துகிறார்.
அருங்காட்சியகங்கள் உலக வரலாற்றினையும் நாட்டின் வரலாற்றினையும் புரிந்து கொள்ள உதவும் உடனடி தரவுக்கூடங்கள். அவற்றைப் பள்ளி மாணவர்களின் வெளிபரப்பு பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் பெரும் கல்விப் புரிதலினை உருவாக்க முடியும். அதற்கான நம்பிக்கையினை வழங்கும் நூலாக இந்நூல் அமைகிறது என்று திரு. கௌதம சன்னா தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.
தமிழ் வாசிப்பு உலகில் அருங்காட்சியகங்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதற்காகவே இந்தத் தொகுதிகளை எழுதியுள்ளதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
“