குறள் 100 மொழி 100
உலகப் பொதுமறை என்றழைக்கப்படும் திருக்குறளிலிருந்து நூறு திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு குறள் ஒரு மொழி என நூறு மொழிகளில், குறள் 100 மொழி 100 என்கிறத் தலைப்பில் ஆழி பதிப்பகம் ஒரு சிறிய நூலை 2019 இல் வெளியிட்டிருந்தது. அந்த நூல் தொடக்கத்திலிருந்தே பரவலான வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் 2023 இல் அதற்கு மாபெரும் புகழ்வெளிச்சம் கிடைத்தது.
ஜனவரி 2023 இல் சென்னையில் நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தக் கண்காட்சியில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட குறள் 100 மொழி 100 புத்தகம்தான். கையடக்கப் பதிப்பாக ஆழி வெளியிட்ட இந்த நூலை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மிகப்பெரிய புத்தகமாக வடிவமைத்து அரங்கின் மையத்தில் வைத்திருந்தனர். தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யமொழி உள்ளிட்ட தலைவர்களும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
வெளிநாட்டு, இந்திய பார்வையாளர்கள் இந்த பெரிய அளவு நூலைப் புரட்டி, தங்கள் மொழியில் திருக்குறள் இருக்கிறதா என்பதைத் தேடிபார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். கண்காட்சி அரங்கில் மேலே தொடங்கவிடப்பட்டிருந்த புத்தக வடிவங்களிலும் இந்தத் திருக்குறளே இடம்பெற்றிருந்தது.
கண்காட்சிக்குப் பிறகு இந்த பெரிய குறள் நூல், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் அந்த நூலகத்துக்கு வருபவர்கள், முகப்பிலேயே வைக்கப்பட்டுள்ள நூறு மொழி திருக்குறள் புத்தகத்தைப் புரட்டாமல் போவதில்லை.