Description
முனைவர் வீரவநல்லூர் சுந்தரம் ராஜம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். கணிதத்தில் இளங்கலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றபின், தமிழார்வத்தில் மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேர்ந்து (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். பின்பு, 1963 முதல் 1975 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மொழியியலில் சான்றிதழ் (1974), பட்டயப் படிப்புகளையும் (1975) மதுரைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். பின்னர், அமெரிக்கா சென்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் 1977இல் முதுகலைப் பட்டமும் 1981இல் முனைவர் பட்டமும் பெற்றார். அவரது முனைவர் பட்ட ஆய்வு சமஸ்கிருதப் பேராசிரியரும் பாணினியின் அஷ்டாத்யாயீயை ஆய்ந்த அறிஞருமான ஜோர்ஜ் கார்டோனாவின் வழிகாட்டுதலில் தொல்காப்பியத்தையும் சமஸ்கிருதத்தின் பண்டைய இலக்கணங்களையும் ஒப்பிட்டது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம் இரண்டிலும் பல ஆண்டுகள் விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்க மாணவர்களுக்குப் பல நிலைகளில் தமிழ்மொழி பயிற்றுவித்துள்ளார். பல ஆராய்ச்சித்திட்டங்களுக்கு அமெரிக்காவில் நிதி உதவிபெற்று, தமிழாராய்ச்சியை மேற்கொண்டார். அவரது தலைசிறந்த படைப்பு, மிகப் பெரிய ஆய்வு நூல், “A Reference Grammar of Classical Tamil Poetry: 150 B.C.-pre-fifth/sixth Century A.D.”
மற்றொரு குறிப்பிடத்தகுந்த நூல், 16ஆம் நூற்றாண்டில் அன்றீக்கு அடிகளாரால் (Fr. Henriques) போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஜீன் ஹெயின் (Jeanne Hein) என்பவருடன் இணைந்து அவர் எழுதிய இந்த நூல் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசை நூல் வரிசையில் (Harvard Oriental Series) வெளிவந்தது. முனைவர் ராஜம் அவர்கள் பழம்பெரும் புலவர்களான பேராசிரியர் இலக்குவனார், உரைவேந்தர் துரைசாமிப்பிள்ளை, பேரா. தமிழண்ணல் போன்றோரின் மாணவி. பேரா. அ.கி. ராமானுஜன், பேரா. எமனௌ ஆகியோரின் பாராட்டைப் பெற்றவர்.