Description
“இந்த நூலில் 21 உலக அருங்காட்சியகங்கள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளார் முனைவர் க.சுபாஷிணி. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆகிய நான்கு கண்டங்களில் சார்ந்த 20 நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில், ஆசிரியர் நேரடியாகப் பயணம் செய்து சேகரித்த செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
நாம் செல்கின்ற ஊர்களில் வாழ்கின்ற மக்களின் பண்பாட்டை, அவர்களது இன அடையாளத்தை, அவர்களது மூதாதையர்கள் அந்நிலத்தில் கடந்து வந்த வரலாற்றுச் சுவடுகளை அறிந்து கொள்வதற்கு நமக்கிருக்கும் சிறந்த வழி அருங்காட்சியகங்கள் என்று தான் நம்புவதாக ஆசிரியர் கூறுகிறார்.
கடந்துபோன வரலாற்றைக் கால இயந்திரத்தில் பயணித்து பின்னோக்கிச் சென்று அப்படியே நாம் அதனை அறிந்து உணர்ந்து கொள்ளும் அனுபவத்தைப் பெற அருங்காட்சியகங்கள் நமக்கு உதவுகின்ற. அருங்காட்சியகங்களின் மையப் பொருளாக வரலாறு மட்டுமே அன்றி, சமூகவியல், மக்கள் வாழ்வியல், வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், விவசாயம், கலை, அறிவியல் போன்ற பல்வகைப்பட்டதுறைகள் சார்ந்த செய்திகளை ஆவணப்படுத்தி அவற்றை மக்களின் பொது அறிவு வளர்ச்சிக்கும் தேடல் திறனை விரிவாக்கிக் கொள்வதற்கும் அருங்காட்சியகங்கள் கருவியாக அமைகின்றன.
அயல்நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் பல அரசு பராமரிப்பிலிருந்தாலும்கூட, தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அருங்காட்சியகங்களும் இருக்கின்றன.
அருங்ககாட்சியகங்களைச் சென்று காணும் ஆர்வம் தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்ற வேண்டும் என்பதே இந்த நூல் உருவாக்கத்திற்கான எனது குறிக்கோள். அந்த வகையிலான சிந்தனை மாற்றத்தை இந்த நூல் வாசிப்போருக்கு ஏற்படுத்தும் என்கிறார் ஆசிரியர்.
“