Description
இராவணன் இரக்கமற்ற அரக்கன் எனும் கம்பனின் குற்றச்சாட்டை எதிர்த்து வாதம் தொடங்குகிறது. கம்பனையும் மறு விசாரணைக்கு அழைத்து, இராவணன் தன் கட்சிக்காக தானே வாதிடுகிறான். இராமன் ஆட்சி செய்த நிலத்தில் அங்குள்ள தர்மத்திற்கு ஏற்ற வகையில் செய்த காரியங்களுக்காக பாராட்டப்படுகையில், என் இனம் காக்கவும், மக்கள் நலன் பேணவும் நான் செய்த அதே காரியங்கள் எவ்வாறு தவறாகும் என்று வாதிடுகிறான். கடமையா? இரக்கமா? என்பது போன்ற இராவணின் கேள்விகள் நீதிபதியையும் தன் கட்சிக்கு இழுத்து, இராமன் இரக்கமற்று நடந்து கொண்டதை மன்றத்தில் எடுத்துரைக்கிறான்.
சம்பூகன் தவம் செய்தான் என்பதற்காக இராமன் அவன் தலையைக் கொய்ததையும் நீதிதேவன் முன் வைக்கிறான் இராவணன். வால்மீகி எழுதிய இராமாயணத்தை அப்படியே மொழிபெயர்க்காமல், கம்பன் தன் கற்பனைகளையும் ஏற்றி எழுதிய உண்மையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இராமன் கதை வெறும் புனைவு என்பதும் இதன் மூலம் புலப்படுகிறது. ரிஷிகளின் பத்தினிகள் மீது மோகம் கொண்ட அக்னி மீது குற்றம் சுமத்தி யாகங்களின் யோக்யதையை கேள்விக்குள்ளாக்குகிறான் இராவணன்.
தன் சாபம் தீர உதவிய இராமனை கருணாமூர்த்தி என புகழ்ந்த அகலிகையிடம், கர்பவதியான என்னை சந்தேகம் கொண்டு காட்டுக்குத் துரத்தியதுமல்லாமல், பாதாளத்தில் நான் புதையும் வரை என்னை சந்தேகித்தாரே அந்த இராமனை கருணை உள்ளவன் என்று சொல்லாதே என்கிறாள் சீதா. இராவணனின் வாதங்களைக் கேட்டு இறுதியில் நீதிதேவனே மயங்கி விழுகிறார்.