Description
தமிழுலகில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுள்ள தமிழ்த்தாத்தா அவர்களின் ஒவ்வொரு அணுக்களின் எண்ணங்களையும் உள்வாங்கி அவருடன் உலா வருவது போலவே முனைவர் க. சுபாஷிணி எழுதியுள்ளார். இவரது நூலின் தலைப்பிற்கு ஏற்ற வகையிலேயே நூலினுள் இடம் பெரும் இயலின் தலைப்பு “மதுரைக்கு உலா”. இந்நூலை வாசிக்கையில் நேர்மையான, அச்சமற்ற, துணிவான ஒரு ஆராய்ச்சியாளராகத் தெரிகின்றார் நூலின் ஆசிரியர்.
மேலும் ஒவ்வொரு இயலிலும் இடம்பெறும் கருத்துக்களுக்கேற்ப தனது கருத்துக்களையும் ஒன்றிப்போகுமாறு பதிவு செய்துள்ள போக்கும் மிகவும் பாராட்டிற்குரியது.
– முனைவர் க. பசும்பொன்
துணை இயக்குனர் தமிழ் வளர்ச்சித்துறை
“ஆதி யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளிலிருந்து திராவிட நாட்டின் புராதன கீர்த்தி உன்னாலன்றோ வெளிப்பட்டது? அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து உன் அன்னையினை சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்? அதுமட்டுமா! ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றை ஆய்ந்து பதிப்பித்து அந்த அன்னையின் இணையடிகளில் சமர்ப்பித்தவன் நீ அன்றோ? அவற்றுடன் சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த முல்லை என ஒளிர வைத்தவனும் நீ அன்றோ? உன்னை வணங்குகிறேன்” என்று ரவீந்திர நாத் தாகூர் உ. வே. சா. வைப் புகழ்ந்து பாடிய கவிதையை நரசய்யா தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியரின் நூலைப் படிப்பவர்கள் உ. வே. சா. வுடன் உலா வருவது போன்ற மெய்நிகர் தன்மையை பெறுவார்.