Description
அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டிலிருந்தும் 100 குறள்களைத் தேர்ந்தெடுத்து, 100 மொழிகளில் மொழிபெயர்த்து பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவரும் தமிழ்ச்சங்கங்கள், தமிழர் அமைப்புகள், நிறுவனங்கள் உதவியுடன் வெளியிடுவதே பெருந்திட்டம். முதற்கட்டமாக ஒரு குறள் ஒரு மொழியில் என்ற கணக்கில் 100 குறள்கள் 100 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் பலவற்றிலும், பசிபிக் தீவுகூட்டங்கள், ஆசிய, ஐரோப்பிய, ஆப்பரிக்க, மொழிகளிலும் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதற்காக உலகெங்கிலுமுள்ள 100 தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சென்னையில் ஜன 16 – 18, 2023 இல் தமிழ்நாடு அரசு நடத்திய பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தின் பெரிய வடிவம், கண்காட்சி நடத்தப்பட்ட அரங்கின் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. வெளிநாட்டினர், உள்நாட்டு பார்வையாளர்கள் என அனைவரது கவனத்தையும் இது கவர்ந்தது. இதனைக் கண்ணுற்ற ஒவ்வொருவரும், தங்கள் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பக்கங்களை ஆர்வத்துடன் புரட்டியதோடு, இப்புத்தகத்தோடு ஒரு “selfie” யும் மறக்காமல் எடுத்துகொன்டனர். தற்போது இந்தப் புத்தகம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழி பதிப்பகம், லேங்ஸ்கேப் லேங்வேஜ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பெருந்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பன்னாட்டு புத்தக கண்காட்சியில் இதற்குக் கிடைத்த வரவேற்பு இத்திட்டத்தை விரைந்து முழுமையாகச் செய்து முடிப்பதற்கு உந்து சக்தியாக விளங்குகின்றது.