Description
அந்நியர்களை இந்நாட்டிலிருந்து விரட்டியடித்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பது எத்தனை முக்கியமானதோ, அதைவிடவும் சாதி மத பேதங்களை கற்பித்து வயிறு வளர்க்கும் ஆதிக்க கும்பலிடமிருந்து உழைக்கும் மக்களை விடுவித்து, சுயமரியாதையுடன் சுக வாழ்வு வாழச் செய்வது முக்கியமானது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கும் அண்ணாவின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று இது.
“ரகசியமாக செய்வது சதி. இது சதியல்ல, சாதி”. “நீங்கள் இருவரும் குரங்காட்டம் ஆடுகிறீர்கள். பாதி ராமாயணமே அதுதானே”. போரில் எதிரிகளை கொலை செய்வது பாவம், அதற்கு பிராயச்சித்தமாக சுத்தி ஹோமம் செய்ய 600 வராகன் பிடிக்கும்”. “சிவாஜி வீரர் ஆனால் உயர்ந்த சாதியினரல்ல குடியானவர் குலம். உயர் குல மக்கள் கூடியுள்ள இடத்தில் அவர் தலைமை தாங்குவது முறையல்ல”. “ஆரியம் விதைக்காது விளையும் கழனி, வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம். அது முதலில்லா வியாபாரம்.” இப்படி பல சிந்திக்கத்தூண்டும், அதேவேளையில் சமூகத்தைப் பீடித்து இருக்கும் சாதியின் கோரப்பிடியையும் விளக்கும் வகையிலான வசனங்கள் ஏராளம்.
இல்லாத சாஸ்திர சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி சிவாஜி முடி சூடுவதைத் தடுக்க நினைக்கும் ஆதிக்க மனோபாவம் கொண்ட நயவஞ்சகர்களின் அடிபணிந்து முடிசூடுவது போல காட்டிக்கொண்டு மன்னனாகிறார் சிவாஜி. பின்னர் மக்களுக்கு அறிவூட்டும் வேலையை சந்திரமோகனிடம் ஒப்படைப்பதை சுவாரசியமாக நாடகமாக்கியுள்ளார் அண்ணா.