Description
“வாலி என்னும் புனைவு நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், நிஜ வரலாற்றின் சுவடுகளைப் படைப்பூக்கத்துடன் பின்தொடர்கிறது. 1949 இல் மக்கள் சீனக் குடியரசு உதயமான பிறகு வந்த 40 ஆண்டுகால வரலாற்றைப் பேசுகிறது. உலகம் முழுவதையும் பல விதங்களில் புரட்டிப்போட்ட 20ஆம் நூற்றாண்டு சீனத்திலும் மாபெரும் மாற்றங்களையும் மறக்கக் கூடாத அனுபவங்களையும் ஏற்படுத்திச் சென்றது. அவற்றின் படைப்பூக்கம் மிகுந்த பதிவுதான் இந்த நூல்.
நிலச் சீர்திருத்தத் திட்டம், 1959 – 1961 ஆம் ஆண்டின் பஞ்சம், மாபெரும் பாய்ச்சல், வலதுசாரிகளுக்கு எதிரான பரப்பியக்கம், கலாச்சாரப் புரட்சி ஆகியவை இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவின் வரலாற்றையே மாற்றி அமைத்தவை. அந்தத் தருணங்களைச் சீன மக்கள் எதிர்கொண்டு விதத்தை வாலி நகர மக்களின் அனுபவங்களின் வாயிலாகப் பதிவு செய்கிறார் ஜாங் வெய். வசிப்பவர்களின் வரலாற்று நோக்கையும் தத்துவப் பார்வையையும் மறுபரிசீலனை செய்யத் தூண்டக்கூடிய இந்தப் படைப்பு வாசகரின் மனசாட்சியுடன் நேரடியாகப் பேசுகிறது.
மகத்தான நாவல்களின் முக்கியமான ஒற்றுமை அவை காலத்தைத் தம் முக்கியப் பாத்திரமாகக் கொண்டிருக்கும். இந்த நாவலிலும் காலம்தான் மிக முக்கியமான பாத்திரம். மிகவும் கொந்தளிப்பான, ஒற்றைப் பரிமாண வரையறையால் விளக்கிவிட முடியாத சிக்கலான காலத்தைக் கலாபூர்வமாகப் பதிவுசெய்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். கொந்தளிப்புகளுக்கும் நிராசைகளுக்கும் இடையில் துளிர்க்கும் நம்பிக்கைக் கீற்றுடன் நாவல் முடிகிறது. நிஜ உலகில் இந்த நம்பிக்கை போதிய அளவில் வெளிப்படாமல் போகலாம். ஆனால் எந்த நிலையிலும் நம்பிக்கை கொள்வதற்கான காரணத்தை மனித இனம் இழந்துவிடவில்லை என்னும் நம்பிக்கையை நாவல் அளிக்கிறது.”