Description
ஒப்பியல் என்றால் கவிதை, கதை, புதினம், ஓவியம் என்று கலைத்துறையில் மட்டுமே உழன்று கொண்டிருந்தவர்களுக்கு “இலெனினும் அண்ணாவும்” என்ற வரலாற்று ஒப்பியல் இலக்கியத்தைத் தந்துள்ளார் நூல் ஆசிரியர் திரு. ஏ. எஸ். வேணு.
அறிஞர் அண்ணாவோடு அரை நூற்றாண்டு காலம் உடன் பிறந்தோராய், நண்பராய், தோழராய், வாழ்ந்தவர். கல்வியறிவின் தெளிவறிந்த காலமாய், இலெனின் நூல்களிலும் இலெனினியத்திலும் மூழ்கித் திளைத்தவர். எனவே அவர்கட்கு இலெனினையும் அண்ணாவையும் அருகருகே நிற்கவைத்துப் பார்த்து உண்மையை உணர்த்தும் ஆற்றல் சிறப்பாக அமைந்துள்ளது.
1933 இல் அறிஞர் அண்ணா எழுதிய “Moscow Mob Parade” காலகட்டம் தொடங்கி வாழ்நாள் முழுவதும் அண்ணா ஒரு சோஷலிச சிந்தனையாளராகவே இருந்திருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும், ஒரு கம்யூனிஸ்ட் செய்யவேண்டிய ஜனநாயகப் புரட்சியின் கடமைகளைத்தான் அண்ணாவும் அவரது தம்பிகளும் செய்தார்கள். அவர்களின் வரலாற்றின் கடமையாக அதை சரியாகவே செய்யமுயன்றார்கள். பெரிதளவில் வெற்றியும் பெற்றார்கள். ஒரு வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வையில் பார்த்தால், தமிழ்நாட்டை அண்ணாவியர்களே சரியான திசையில் நகர்த்தியிருக்கிறார்கள்.
அண்ணாவின் பொருளாதாரம், சமூகம், தேசிய இன விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தொழிலாளர் நலன், வறுமை ஒழிப்பு போன்ற கோட்பாடுகள் அனைத்திலும் சோவியத் முத்திரை ஆழப்பதிந்திருக்கும் என்பதை எடுத்துக்காட்ட நூறு சான்றுகள் உண்டு. இந்நூலைப் படிக்கையில் அந்தச் சான்றுகளும் முயற்சிகளும் மனக்கண் முன்பு விரிகின்றன.
சென்ற காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் பாலமாக அமைந்திருக்கும் இலெனினும் – அண்ணாவும் நூல் காலத்தின் தேவையாக உள்ளது. அனைவரும் பயன்கொள்க.