Description
அரசர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியக் கூட்டத்தினர் என்றும் தயங்கியவர் அல்லர். நாரதரைத் தொழும் கும்பல், கலகமூட்டுவதிலும் கைதேர்ந்தவர்கள். படை கண்டால் தொடை நடுங்கும் கோழை கூட்டத்திடம் நம் இனத்தவர் “பார்ப்பானைப் பழிப்பது பாவம்” என அஞ்சி அவர்களின் அக்கிரமங்களைக் கண்டு அடங்கி பணிந்து செல்வது கண்டு மனம் வெதும்புகிறார்.
ஆரியர்களை நகைப்புக்குரியவர்களாக நம் இனத்தவர் பார்த்த காலம் மாறி, ஆரியரைப் போன்ற புத்தி கூர்மை, ஆசார அனுஷ்டானம், நடை உடை பாவனை இருப்பதே தமிழருக்கு நன்மை எனும் தவறான கருத்து பரவியிருப்பதை மாற்ற முனைகிறார் அண்ணா. ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடக் கலாச்சாரம் வேறு என்பதை எளிய மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் பல அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவுகளை மேற்கோள் காட்டுகிறார்.
கடவுள் கதைகளையும், பொது அறிவுக்குப் பொருந்தாக் கதைகளையும் ஆரியக் கூட்டம் விடாப்பிடியாக மக்களிடையே பரப்பிக்கொண்டு பிழைப்பதையும் சாடுகிறார். ஹாவல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்ற நூல், மடச் சடங்குகளை நடத்தி சுரண்டிப் பிழைப்பதையும் மூட நம்பிக்கைகளைப் பரப்பவதையும் பார்ப்பனர்கள் வழக்கமாகக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டுகிறது.
ஆரியம் பரவுவதற்கு முன், இந்த மண்ணில் வருண பேதங்கள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார். நிறுவுவதற்கு கி.மு. 5000 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை விளக்கமாக எடுத்துரைக்கிறார்.
ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிவாளிகள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின், பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின் வெற்றி நமதே! என்று முழங்குகிறார் அண்ணா.