Description
இந்நூலில் அறிவைச் சுண்டியிழுக்கும் அறிவியற்பயன்முக அறிவியல் தலைப்புகள் பதினைந்தில் அருமையான படலங்களை அமைத்துள்ளார்கள். முதற்படலத்தில் கா. சேது அறிவியலுக்கே முதன்மையான அறிவியல் முறைகளைப் பற்றி முன்பு தமிழில் கூறப்படாத கருத்துகளை விளக்குகின்றார். பாப்பர், கூன், பெயிராபெண்டு போன்றோரின் கருத்துகளை எளிய தமிழில் விளக்குகின்றார்.
அன்றாட அறிவியல் எனும் படலத்தில் நோபல் பரிசாளர் ச. வெ. இராமனின் வானமும் கடலும் ஏன் நீலநிறமாக இருக்கின்றது என்பது முதல், வானூர்தி பறப்பு, ஊடுகதிர் பயன்பாடு, தொடுதிரை நுட்பியல் வரை பற்பலவற்றை அனைவரும் புரிந்துகொள்ளுமாறு எழுதியுள்ளார். கடைசி படலத்தில் கற்பதற்கு மிகவும் கடினமான குவாண்டம் இயற்பியல் பற்றி துணுக்க எந்திரவியல் என்று எளிமையான ஓர் அறிமுகம் தந்துள்ளார்.
அறிவியல் பயிலாதவர்களும், நியூட்டன் விதிகளை புரிந்துகொள்ளும் வகையில் அருமையான விளக்கப்படங்களுடன் முனைவர் நாகேசுவரன் விளக்கியுள்ளார். வேதியியல் பற்றியும் வியப்பூட்டும் பயன்பாடுகள் பற்றியும் முனைவர் அன்புச்செல்வன் எழுதியுள்ளார். நேனோ தொழில்நுட்பத்தின் பற்பல கூறுகளை அனைவரும் புரிந்தகொள்ளுமாறு முனைவர் செ. கோட்டாளம் எழுதியுள்ளார். இன்றைய தொடர்பாடலுக்கு இன்றியமையாத GPS எனப்படும் முழுப்புவி இடங்குறிப்பமைப்பு பற்றிய அருமையான கட்டுரையை முனைவர் கதிரவன் வரைந்துள்ளார்.
இதுவரை தமிழில் கண்டிராதவாறு இந்நூலில் அரிய கருத்துகளை மிகச்சிறப்பாக முனைவர் கதிரவன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நூல் பெரிதும் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை.