Description
“தலித் மக்கள் மற்றும் அக்கால தலித் தலைவர்கள் எவ்வாறு சாதி இந்துக்களின் எதிர்ப்புகளை முறியடித்து பொறுமை மிக்க ராஜதந்திரங்களோடு அதிகாரப் பகிர்வினை எப்படி அடைந்தார்கள் என்பதற்கு ரெட்டமலையாரின் பணிகள் வாயிலாக அறிய முடிவதுடன், அக்காலகட்டத்தின் வரலாறு, கருத்தியல் வளர்ச்சி மற்றும் அரசியல் பரிணாமங்களின் பாய்ச்சல்களைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் இத்தனை ஆண்டு காலம் தலித் மக்களின் அரசியல் வரலாற்றின் மீது நிகழ்த்தப்பட்ட புறக்கணிப்புகளையும் இருட்டடிப்புகளையும் எந்தவித சமரசமுமின்றி தகர்த்தெறிகிறது இப்பெருந் தொகுப்பு.
ரெட்ட மலை சீனிவாசனார் வாழ்ந்த சூழல் முன்னேபோதும் இல்லாத ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சூழல். இந்திய மண்ணிற்குத் தொடர்பே இல்லாத ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட சூழல். அவர்களிடமிருந்து அதிகாரத்தினைக் கெஞ்சியோ அல்லது வஞ்சித்தோ பங்கிட்டுக்கொள்ளத் துடித்த சாதி இந்துக்கள் எனும் வல்லூறுகள் அதிகம் அரசியல் வானில் வட்டமிடத் தொடங்கிய காலம். ஆங்கில ஆட்சியாளர்களும் அவர்களை நம்பியே அரசியல் மாற்றங்களை உருவாக்க முனைந்த காலமும் அதுதான். இக்காலத்தில் முழிவதுமாக ஐம்பது ஆண்டுகள் தென்னிந்திய அரசியல் அரங்கத்தின் வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கி மாபெரும் பாய்ச்சல் நிறைந்த மாற்றங்களை உருவாக்கக் காரணமாகத் திகழ்ந்தார் ரெட்டமலை சீனிவாசனார் என்பது வியப்பூட்டும் நிகழ்வுத் தொடராக இருக்கிறது.
ரெட்டமலையார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமாக நின்று பணியாற்றினார். தன் காலத்தின் இறுதிவரை சீனிவாசனார் இடைவிடாமல் பணியாற்றினார். சலிப்பின்றி உழைத்தார்.”