இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தனித்தனியாக திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இத்திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பின் பார்வையில், அவர்களின் விருப்பப்படி பெரும்பாலும் உள்ளுணர்வுகளின் (intuition, gut feeling) அடிப்படையில் இருக்கின்றன. இவை உண்மையிலேயே சிறந்த திட்டங்களா, அவை உறுதியான அடித்தளத்தில் உள்ளனவா, இவை நாம் வெற்றிபெறுவதற்குப் போதுமானதா, வெற்றிபெற எதுபோன்ற உத்திகள் தேவை ஆகியவற்றைப் பற்றிய ஆழமான பார்வை இல்லை. இவ்வுத்திகளில் சில சுருக்கமாக:

– வெற்றிக்கான பாதை என்று ஒன்று உள்ளது. அதை முன்கூட்டியே கணித்து திட்டமிட்டு செயல்படமுடியும். எங்கள் அமைப்பின் பாதை/தத்துவம் மட்டுமே வெற்றிக்கான பாதை.

– வெற்றிக்கான பிரம்மாஸ்திரம் என்று ஓர் ஆயுதம் உள்ளது. அது என்ன என்பது எங்களுக்குத் தெரியும் அல்லது அதை எங்களால் மட்டுமே உருவாக்கமுடியும்.

– நல்ல தலைமை கிடைத்தால் சிக்கல்களை எல்லாம் தீர்த்து விடலாம். என்னுடைய தலைவன் மட்டுமே சரியானவன். சரியான பாதை என்ன என்பது தலைவருக்குத் தெரியும். அவர் பாதையைப் பின்பற்றினால் வெற்றிபெறுவது எளிது.

– தலைவர் கட்டளை இடுவார், இயக்கத்தில் உள்ள மற்றவர் பின்பற்றவேண்டும்.

– என்னுடைய பாதையைப் பின்பற்றாதவர்கள் தவறான வழியில் செல்கிறார்கள். அவர்கள் அறியாமையில் உள்ளனர், சுயநலம் மிக்கவர்கள், அல்லது உள்நோக்கம் கொண்டவர்கள், இல்லையென்றால் துரோகிகள்.

– வெற்றி என்பது ஒரு பெரிய இயக்கத்தினால் பெறப்படுவது. மற்ற தமிழ்த்தேசிய இயக் கங்கள் என்பவை தேவையில்லாத போட்டி. அவை நமது ஆற்றலை வீணடிக்கின்றன. ஒரே பாதையில் சென்றால் வெற்றியை எளிதில் அடையலாம்.

– பலமானவன் வெல்வான். அதனால் பலம்தான் முக்கியம்.

– எங்கள் அமைப்பின் குறிக்கோள்கள்தான் தமிழ்த்தேசியக் குறிக்கோள்கள்.

– தமிழ்த்தேசியம் வெற்றிபெறுவதற்குத் தேவையான அறிவு எங்கள் அமைப்பிடம் உள்ளது. அவ்வாறான அறிவைப் பெறுவது கடினமான காரியம் இல்லை.

– தமிழ்த்தேசியம் என்பது அரசியல் முன்னெடுப்பு மட்டுமே.

மேலுள்ள கருத்துக்கள் எந்த ஒரு அமைப்பையும் கருத்தில் வைத்து எழுதப்பட்டது அல்ல. முக்கியமானது என்னவெனில், இக்கருத்துக்களில் ஏதாவது சிலவற்றை ஒரு அமைப்பு கொண்டிருந்தாலும், அவ்வமைப்பு மற்ற அமைப்புகளுடன் இணைந்து இயங்குவதில் சிக்கல் உண்டாகும். மேலும் இவை சரியானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கடந்த சில பத்தாண்டுகளாக உத்திகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் இக்கருத்துக்கள் பழமையானது மட்டுமல்லாமல், தவறானவை என்றே காட்டுகின்றன. அதனால் இவ்வுத்திகளைக் கொண்ட அமைப்புகள் மற்ற அமைப்புகளுடன் இயங்க முடியாதது மட்டுமல்ல, அவை தனித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் மிகக்குறைவு.

தமிழ்த்தேசியம் வெற்றிபெற என்ன செய்யவேண்டும், அதற்கு எது மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும், எவ்வாறு அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளையும் இணைத்து சிறப்பாகச் செயல்படுவது ஆகியவற்றைப் பற்றிய ஒரு பெரிய பார்வை இன்று தேவைப்படுகிறது. மொத்தத்தில் நமக்கு ஒரு பெருந்திட்டம்
(A Grand Strategy) தேவைப்படுகிறது. அப்படி ஒரு பெருந்திட்டம் இன்று இல்லாதது குழுக்கள் இணைந்து செயல்பட முடியாததற்கு ஒரு முக்கிய காரணம். தங்களின் செயல்பாடுகளும் மற்றவர்களின் செயல்பாடுகளும் எவ்வாறு ஒரு பெருந்திட்டத்தில் பங்கு கொள்கின்றன எனப் புரிந்தால் ஒட்டு மொத்த செயல்பாடு சிறக்கும். அவ்வாறான பெருந்திட்ட உருவாக்கத்திற்கான ஒரு முயற்சிதான் இந்நூல்.

நாம் அனைத்தையும் நல்ல அறிவியல் அடித்தளம் கொண்ட தத்துவங்களைக் கொண்டே சிந்திக்கவேண்டும். இதன் மூலம் நமது திட்டங்களை உறுதியான அடித்தளத்தில் அமைத்து தெளிவாகச் செயல்படமுடியும். இல்லையென்றால் எது சரி எது தவறு என்று தெரியாமல் அவரவருக்குத் தோன்றிய பாதையில் செல்லவேண்டி வரும். அவ்வாறான பாதை பெரும்பாலும் தவறாகவே இருக்கும், தெரியாத பாதையில் சென்று முட்டிக்கொள்ள நேரிடும்.

Theory is crucial. Serendipity may occasionally yield insight, but is unlikely to be a frequent visitor. Without theory, we make endless forays into uncharted badlands. With theory we can separate fundamental characteristics from fascinating idiosyncracies and incidental features. Theory supplies landmarks and guideposts, and we begin to know what to observe and where to act. [22]

எந்த ஒரு முறையிலும் அல்லது அமைப்பிலும் மிகப்பெரிய முன்னேற்றம் என்பது சட்டக மாற்றம் (Paradigm change) ஏற்படும்பொழுது நிகழ்கிறது [30]. சட்டக மாற்றம் என்பது ஒரு அடிப்படைப் பார்வை மாற்றம், அதாவது நமது சிக்கல்களைப் பற்றிய பார்வையைத் தலைகீழாக மாற்றுவது. நாம் வெற்றிபெற அதுபோன்ற பாரிய சட்டக மாற்றங்கள் அடிப்படைத் தேவையானது. நாம் மேலே பார்த்த தவறான மோசமான உத்திகள் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு, நவீன அறிவியல் தத்துவங்களின் வழியாக புதிய சட்டக மாற்றத்தைப் பயன்படுத்தி, தமிழ்த்தேசியத்திற்கான ஒரு பெருந் திட்டத்தை இந்நூலில் உருவாக்குவோம். இந்நூல் பின்வரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி-2: முதலில் உத்திகளைப் பற்றிய உறுதியான அடிப்படைத் தத்துவங்களைப் பார்ப்போம். இது அறிவு, வேறுபாடுகள், ஆற்றல் என்ற மூன்று முக்கியப் பகுதிகளைக்கொண்டது.

பகுதி-3: அடிப்படைத் தத்துவங்களைப் போரிலிருந்து பொருளாதாரம் வரை பயன்படுத்தலாம். ஓர் உதாரணத்திற்கு சன் சூவின் போரியல் உத்திகளை எவ்வாறு சிறப்பாகப் புரிந்துகொள்வது என சுருக்கமாகப் பார்ப்போம்.

பகுதி-4: அடிப்படை தத்துவங்களை நமது சமூகச் சூழலுக்குப் பயன்படுத்த, நமது சூழலின் சிக்கல்தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்பதால், இவ்வுலகின் சிக்கல்தன்மையை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

பகுதி-5: தமிழ்த்தேசியத்திற்கான உத்திகளை வகுக்கும் முன், தமிழ்த்தேசியத்தின் குறிக்கோள்களை தெளிவுபடுத்துவோம்.

பகுதி-6: குழுக்களின் குழு தத்துவத்தின் மூலம் எவ்வாறு அடிப்படை உத்திகளை அதிவேகமாக செயல்படுத்த முடியும் என ஆராய்வோம்.

பகுதி-7,8,9: அடிப்படை உத்திகளான அறிவு, ஆற்றல், வேறுபாடுகளை தமிழ்த்தேசிய சூழலுக்குப் பயன்படுத்தி உத்திகளை அமைப்போம்.

பகுதி-10: மேலே பார்த்த அனைத்து உத்திகளையும் கொண்டு தமிழ்த்தேசியத்திற்கான ஒரு பெருந்திட்டத்தை உருவாக்குவோம்.

பகுதி-11,12,13: இறுதியில் இன்றைய இந்துத்வா, திராவிட அமைப்புகளின் உத்திகளையும், புலிகள் பயன்படுத்திய உத்திகளையும் நாம் பார்த்த தத்துவங்களின் அடிப்படையில் ஆராய்வோம்.

இந்நூலில் கருத்துக்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளது. அதனால் பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாகப் படிப்பதே நல்லது. நடுவிலிருந்து படித்தால் சரியான புரிதல் கிடைக்காது.

– முனைவர் சு. சேதுராமலிங்கம்.

Mini Cart 0

Your cart is empty.