தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி வரலாற்று ஆய்வுகளுக்கு ஏதுவான பல குறிப்புகளைத் தேடித் திரட்டித் தொகுத்துப் போற்றுதலுக்குரிய வகையில் ஒரு நூலாக ஆவணப்படுத்தியுள்ளார் தோழர் கௌதம சன்னா அவர்கள். ஏற்கனவே வெளியாகியுள்ள சீனிவாசனாரின் ‘ஜீவிய சரித்திரம்’ என்னும் வாழ்க்கை வரலாறும் இத்தொகுப்பில் மீள்பதிவாகியுள்ளது என்றாலும், இதுவரை வெளிவராத பல அரிய தகவல்களைக் கொண்டதாகவும் இது விளங்குகிறது என்பதே இதன் சிறப்பாகும். தோழர் சன்னா அவர்களின் இந்த அளப்பரிய முயற்சி வெகுவான பாராட்டுதலுக்குரியதாகும்.

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, பூர்வீகக் குடிகளான ஆதிதிராவிட பெருமக்களின் தலைநிமிர்வுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் அளப்பரிய வரலாற்று ஆவணமாக இத்தொகுப்பு விளங்குகிறது. ‘ஆரியம்-திராவிடம்’, ‘பிராமணர்- பஞ்சமர்’ என்கிற முரண்களை அடிப்படையாகக் கொண்ட கூர்மையான-தீவிரமான உரையாடலைத் தொடங்கி வைத்தவர் சீனிவாசனார் அவர்களே என்பதை இத்தொகுப்பு முன்மொழிகிறது. நீதிக்கட்சிக் காலத்தில் தமிழகமெங்கும் இத்தகைய உரையாடல் பரந்துபட்ட அளவில் வெகுமக்களிடையே விரவிப்பரவியது என்றாலும், ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பே இதற்கான கருத்தியல் வித்தினை ஊன்றிய பெருமை தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரையே சாரும். இதனை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இத்தொகுப்பு.

ரெட்டமலை சீனிவாசனார் அவர்கள், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருக்கு மூத்தவர் ஆவார். எனவே, இவர்கள் இருவரும் முன்னெடுத்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அல்லது பார்ப்பனிய எதிர்ப்பு என்பதை 1890-காலகட்டத்திலேயே ரெட்டமலை சீனிவாசன் மிகவும் தீவிரமாக மேற்கொண்டார். அதாவது, தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீதிக்கட்சிக்கும் முன்னரே பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைக் கையிலெடுத்து சனாதனக் கட்டமைப்பின்மீது பெருந்தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். ஆரியமா? திராவிடமா? என்கிற இனம் சார்ந்த சொல்லாடலும் கருத்தாடலும் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முன்னரே சீனிவாசனாரின் காலத்தில் தொடங்கிவிட்டது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) தேர்வுகளை இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் நடத்த வேண்டுமென சாதிஇந்துக்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்தபோது, அதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து சீனிவாசனார் அவர்களும் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் பிராமணர்களின் நீண்டகால ஆதிக்கத்தையும் பூர்வீகக் குடிமக்களுக்கு எதிராகக் காலங்காலமாகத் தொடரும் சாதிக் கொடுமைகளையும் விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக, அதிர்ச்சியளிக்கக் கூடிய இரண்டு முக்கியமான சாதிய வன்மங்களைச் சான்றுகளாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகேயுள்ள பிராமணர் தெருவில் ‘ பறையர்கள் உள்ளே வரக்கூடாது’ என்கிற அறிவிப்புப் பலகை இருந்ததையும்; ‘பச்சையப்பன்’ கலாசாலையில் ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு (பட்டியல்படுத்தப்பட்ட அனைத்துப் பிரிவினருக்கும்) இடமில்லை என்கிற அறிவிப்பையும் பதிவுசெய்து சாதி இந்துக்களின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளார். இத்தகைய சனாதன சக்திகள் ஐசிஎஸ் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று உயரதிகார ஆட்சிநிர்வாகப் பொறுப்புகளில் அமர்ந்தால் சாதியத்தின் குரூரம் எத்தகையதாக வலிமை பெறும் என்கிற அச்சத்தை வெளிப்படுத்தி ஆங்கிலேயர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அடுத்து, தனது ஜீவிய சரித்திரத்தில் ஓரிடத்தில் “இந்து சமயவாதிகளான சாதி இந்துக்களும் தமிழ் சமயிகளான தாழ்த்தப்பட்டோரும் ஒரே மதசார்பினராவர்” என்று குறிப்பிடுகிறார். அதாவது, இன்றைக்குத் தலித்துகள் என அடையாளப்படுத்தப்படும் மக்களை ‘தமிழ்ச்சமயிகள்’ என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

சாதியத்தை எதிர்ப்பவர்கள், ‘சாதியற்றவர்கள்’ என்றாலும் ‘சமயமற்றவர்கள் அல்லர்’ எனக் கூறமுடியாது; அவர்களுக்கும் சமயமுண்டு. அதாவது, சாதியமில்லாத தமிழ்ச்சமயம் எனக் குறிப்பிடுகிறார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சாதி இந்துக்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவதை விட, அவர்கள் சாதியத்தைக் கடைப்பிடிப்பதால் அவர்களை இந்து சமயவாதிகள் அல்லது ஆரியர்கள் என்பதே பொருத்தமானது எனக் கருதுகிறார். அதாவது, சாதியற்றவர்களே திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்றும் பார்ப்பனர்கள் மட்டுமின்றி, சாதியத்தைக் கடைபிடிப்பவர்கள் யாவரும் சாதிஇந்துக்கள் அல்லது ஆரியர்களே என்றும் காண்பதுவே சீனிவாசனார் அவர்களின் பார்வையாக உள்ளது.

இந்துசமயம், தமிழ்சமயம் என இருவேறு சமயங்களாகக் குறிப்பிட்டாலும் இவ்விரு சமயத்தவர்களும் ‘ஒரேமத சார்பினராவர்’ என்கிறார் சீனிவாசனார். இதன்மூலம் சமயம் வேறு ; மதம் வேறு என்று கூறுகிறார். இவர்களுக்கான சமயம் எது எது பிரித்துக் கூறியிருக்கும் அதேவேளையில், சமயத்திலிருந்து மதம் வேறுபட்டது என்றால், மதம் எது என்கிற கேள்வி எழுகிறது. இன்று நாம் காணும் இந்துமதமா? அல்லது வேறு ஏதேனும் ஒரு மதமா? என்பது ஆய்வுக்குரியதாகும்.

சாதியமைப்பை ஏற்கும் சாதிஇந்துக்களுடன் சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கி, இவர்கள் அனைவரையும் இன்று இந்து மதம் என்கிற ஒரே அடையாளமாகக் காட்டப்படுகிறது. அதாவது, இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்கள் காலப்போக்கில் ஒருங்கிணைந்து இன்று நாம் காணும் இந்துமதமாக அறியப்படுகிறது. சாதி எதிர்ப்பாளர்களும் இந்துக்கள் தான் என அடையாளப்படுத்தப்படுவது இந்து மதத்தின் புதிர்களில் ஒன்றாக உள்ளது.

சாதி எதிர்ப்பாளர்களையும் இந்துக்களாக உள்வாங்கியுள்ள இந்துமதம், அவர்களுக்கு எதிரான இழிவுகளையும் வன்கொடுமைகளையும் கைவிடவில்லை. இதனால், இந்து மதத்துக்கெதிராக மதமாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. மதமாற்றம் என்பது சாதிக்கெதிரான ஒரு எதிர்வினையே என்றாலும் இதில் சீனிவாசனாருக்கு உடன்பாடில்லை. மதமாற்றம் கூடாது என்பதே அவரது வலுவான நிலைப்பாடு என்பதை தெளிவுசெய்யும் ஒரு சான்றாவணமாக இந்நூல் விளங்குகிறது.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து பங்கேற்றவர் சீனிவாசனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மதமாற்றம் மேற்கொண்டபோது, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் சீனிவாசனார் என்பதை இந்நூல் சான்று பகருகிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவ முடிவெடுத்தபோது, ‘சாதி இந்துக்களுக்கு அடக்கமாக ஏன் இருக்க வேண்டும்? இந்துமதத்தை வெளியேறுவோம் ‘ என்று தலித்துகளுக்கு அறைகூவல் விடுத்தார்.அப்போது நாம் எங்கே சாதி இந்துக்களுக்கு அடக்கமாக இருக்கிறோம்? தொடர்ந்து எதிர்ப்பவர்களாகவே இருப்பதால்தான் இத்தகைய ஒடுக்குமுறைகளை இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது என்று புரட்சியாளர் அம்பேத்கருடன் சீனிவாசனார் முரண்பட்டிருக்கிறார் என்பதை இத்தொகுப்பில் காணமுடிகிறது.

அடுத்து, சீனிவாசனாரின் அரசியல் பார்வையில் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கமாகும். ‘தென்னிந்திய ஆதிதிராவிடர் வாலிபர் கழகம்’ என்னும் அமைப்பின் சார்பில் 1936ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் இந்தக் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தென்னிந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபையின் இளைஞர் பிரிவாகச் செயல்பட்டது என்பதும் சீனிவாசனார்தான் அக்கழகத்தின் புரவலர் மற்றும் வழிகாட்டி என்பதும் ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. அந்த வாலிபர் கழகத்தின் இலச்சினையில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனப் பொறிக்கப்பட்டுள்ள ஆதாரமும் இந்நூலில் பதிவாகியுள்ளது. எனவே, இந்த அரசியல் நிலைப்பாடானது சீனிவாசனாருக்கு உடன்பாடான கருத்தியல்தான் என்பதையும் உணரமுடிகிறது. எண்பது ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர் நலன்களில் அக்கறைகொண்ட ஒரு முன்னோடியாகப் பணியாற்றியுள்ளார் என்பதையும் அறியமுடிகிறது.

1939இல் தந்தை பெரியார் எழுப்பிய தமிழ்நாடு தமிழர்க்கே என்னும் முழக்கத்தை, சற்று மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1936 இல் தென்னிந்திய ஆதிதிராவிட வாலிபர் கழகம் முன்மொழிந்துள்ளதை இன்றைய தமிழ்த்தேசிய சக்திகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். 1968இல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று தமிழகத்திற்குப் பெயர்சூட்டுவதற்கு முன்பே-1936இலேயே ‘தமிழ்நாடு’ என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியிருப்பதையும் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே தமிழ்த்தேசிய உணர்வை அரசியல் முழக்கமாக முன்வைத்ததையும் இன்றைய கால தமிழ்த்தேசிய அரசியலோடு பொருத்தி ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்திய விடுதலைக்குப் போராடிக்கொண்டிருக்கிற சூழலில், சென்னை மாகாணத்துக்குட்பட்ட ஒரு பகுதியான தமிழர் வாழிடத்திற்கு மட்டும் தனியே விடுதலை வேண்டும் என்கிற உணர்வு அந்த வாலிபர் கழகத்தினரிடம் மேலோங்கியிருந்தது என்றால் அவர்களின் அரசியல் பார்வை எத்தகைய பரந்த பார்வை என்பதை உணரமுடிகிறது. அவ்வாலிபர்களின் வழிகாட்டியான சீனிவாசனாரின் சிந்தனை எத்தகைய தொலைநோக்கைக் கொண்டிருக்கிறது என்பதையும் அறியலாம்.

தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே பண்டிதர் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசனார், ரெவெரன்ட் ஜான்ரத்தினம், போன்றவர்களின் பொதுநீரோட்டத் தலைமைத்துவத்தை ஏற்க இயலாமல் அவர்களைச் சாதித் தலைவர்களாகவே சுருக்கிப் பார்க்கும் அவலம் உள்ளது. இது சாதியவாதிகளின் குறுகிய பார்வை என்பதை உணரலாம்.

1890களின் தொடக்கத்திலேயே- அதாவது,19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே ஆரியம், திராவிடம், பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழ்ப்பற்று, தமிழ்ப்பௌத்தம், தமிழ்சமயம், தமிழர் நலன், தனித்தமிழ் நாடு போன்ற முற்போக்கான சனநாயக சிந்தனைகளை முகிழ்த்த பெருமைக்குரிய பெருந்தலைவர்களை, சாதியவாத பிற்போக்கு சனாதன சக்திகள் ஏற்க மறுத்து, வரலாற்றின் இருட்டில் உருட்டிப் புதைத்தனர் என்றாலும், இன்று அவர்களின் சிந்தனைகளெல்லாம் திமிறியெழுந்து மீண்டுயர்ந்து வெளிச்சத்தில் மிளிர்வதைக் காணமுடிகிறது. இதற்கான சான்றாக விளங்கும் ஒரு வரலாற்றுப் பேராவணம்தான் தோழர் சன்னாவின் இந்த அரிய தொகுப்பாகும்.

இவை போன்ற ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன.அரசியல் தெளிவுபெற விழையும் முனையும் இளைய தலைமுறையினர் யாவருக்கும் இது வழிகாட்டும் விசைகொண்ட திசைநூலாகும் இதனைத் திரட்டிய தோழர் கௌதம சன்னா அவர்களுக்கும் பதிப்பித்த ஆழி பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 

முன்னுரையில் திரு. தொல் திருமாவளவன்

Mini Cart 0

Your cart is empty.