Description
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து தேர்தல் அரசியலில் ஈடுபட முடிவெடுத்த அண்ணா, தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டில்லாமல், தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கி அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் கண்டு, அதன் முழுப் பயனையும் கடைக் கோடித் தமிழனுக்கும் கிடைக்கச் செய்வதே அவரின் சிந்தனையாக இருந்தது என்பதற்கு இந்தப் புத்தகம் சான்றாகும்.
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டாலும், தமிழ்நாடு ஒரு மாநிலமாக செழிப்பதற்கு பயன்பட்ட அண்ணாவின் பொருளாதாரச் சிந்தனைகள் “திராவிடப் பொருளாதாரம்” என்றொரு பார்வை மேலோங்குவதற்கு தொடக்கமாக இருந்தது. வடஇந்திய பனியாக்கள் தொழில் துறையில் கோலோச்சுவதற்கு வங்கிகளும், வங்கிக் கடன்களும் எவ்வாறு உதவுகின்றன என்றும், பம்பாய் போன்ற வடஇந்திய தொழில் நகரங்களில் பல தொழில்களில் நவீன தொழில்நுட்பங்கள் இறக்குமதி செய்யப்படுவதையும், பிர்லா போன்ற பெரும் பணக்காரகளுக்கு அரசே மனமுவந்து தொழில் தொடங்க உதவுகின்றது என்பதையும் விளக்குவதுடன், இந்த ஒரு சார்பு நிலையைக் கண்டிக்கவும் செய்கிறார்.
இன்று தமிழ்நாடு தொழில்துறையிலும், மனித வளத்திலும், பொருளாதாரத்திலும் சிறந்த மாநிலமாக விளங்கினாலும் மேற்சொன்னவை அனைத்தும் இன்றும் பொருந்திப் போகும் நில்லையில் தான், திராவிடக் கொள்கைகளான “சமூக நீதி”, “சமத்துவம்” போன்றவற்றை பொருளாதாரத் தளத்திலும் நிலைநாட்டுவதற்கு “மாநில சுயாட்சி” கோரும் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படும் இவ்வேளையில் அண்ணாவின் பொருளாதாரச் சிந்தனைகளும், சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்கான காரணங்களையும் இந்தப் புத்தகத்தின் வாயிலாக அறிந்துகொள்வது எளிதாகும்.