Description
திராவிட மண்ணையும், திராவிடர்களையும் ஆண்டு வந்த வீரம் சொரிந்த திராவிட மன்னர்கள் மறைந்துவிட்ட நிலையில், வீரம் சுருங்கி வீணர்களின் ஆதிக்கம் ஏற்பட்ட நிலை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எழுதிய திராவிட கவிஞர்கள் வாழ்ந்த மண்ணில் திராவிட கலையும் மொழியும் மதிப்பிழந்து நிற்கும் நிலை. தொழில், வேலைவாய்ப்பு, கோயில் என எங்கும் திராவிடர்களுக்கு பின்னடைவு என்ற நிலையை கண்ணீர் வரலாறாக படைக்கிறார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்த இயக்கம் சேலம் மாநாட்டில் திராவிடர் கழகமாக பெயர் மாறியதையும், அம்மாநாட்டு தீர்மானங்களையும் விளக்குகிறார். பிழைக்க வழி கேட்காமல்; உழைக்க வாருங்கள், சக்தி உண்டா என வினவாமல்; இனத்தை மீட்க வாருங்கள், எப்படி எப்போது முடியும் என கலங்காமல் போருக்கு வாருங்கள், என்ற பெரியாரின் அறிக்கையையும் வாசிக்கிறார்.
திராவிட நாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்திற்கான விளக்கத்தையும் விரிவாக குறிப்பிடுகிறார். பாகிஸ்தான் தேவை என்பதற்கு கூறப்பட்ட காரணங்களைவிட, அதிகமான காரணங்கள் திராவிட தனியரசு தேவை என்பதற்கு உள்ளதை திராவிட மக்கள் உணர வேண்டுமென்கிறார்.
திருச்சி கூட்டத்தில் மக்கள் வெள்ளமெனத் திரண்டனர், அதில் பெண்களும் உண்டு என்று பெருமிதம் கொள்கிறார். “நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்; இதில் நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம்” என்றதுடன், ‘கொலை வாளினை எடடா!’; ‘மிகு கொடியோர் செயல் அறவே’ என்றும் முழங்கி பெரியாரை இப்பெரும் படைக்கு தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
இலட்சியம் வளர்ந்த வரலாறு கூறுகையில், நாம் திராவிடர் என்ற முழக்கத்தைத் தொடங்கி தன் இறுதி மூச்சு வரை அதற்காக பாடுபட்ட டாக்டர். சி. நடேசனார் பற்றியும் நினைவு கூறுகிறார். நாட்டில் ஜனநாயகம் செழிக்க புதிய கட்சிகள் பல வேண்டுமெனவும், பத்திரிகைச் சுதந்திரம் தேவையெனவும் எடுத்துரைக்கிறார்.