Description
குடியாட்சிக் கோமான் முடியாட்சிதான் மடிந்ததே தவிர, குடியாட்சியிலும் கொடுமைகள் மக்களைத் தொடர்கின்றது. குடியாட்சிக் கோமான்கள் சிரித்து சித்திரவதை செய்திடவும், மயக்கி மதியை மாய்த்திடவும் வழிகண்டுல்லத்தை விவரிக்கிறார். மக்களின் ஆதரவைத் தேடிப் பெற்று பின்னர் அவர்களை ஆட்டிப்படைக்கும் சர்வாதிகரிகளாக மாறுவதை கடுமையாக சாடுகிறார். அப்படிப்பட்ட குடியாட்சிக் கோமான்கள் தோன்றிவிடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, மக்களுக்கு விழிப்புணர்வும், தெளிவும், துணிவும் பெருமளவு வேண்டுமென்கிறார். நாட்டு நடப்புகளை கூர்ந்து கவனித்து, ஆய்ந்து அறிந்து, சீர்மிகு நலன் பெற செம்மையான முறை எது என அறிந்துகொள்வது அவசியமென்கிறார். பின்னர் அதன்படி ஆட்சிமுறையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்கிறார். மக்கள் இந்தத் தெளிவையும் துணிவையும் பெறுவதற்காக நாம் ஓயாமல் பணியாற்றிட வேண்டியுள்ளது என்று இப்படைப்பி மூலம் தெரிவிக்கிறார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் முடியரசு கேடு பயப்பினும் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமேயன்றி மாற்றிவிட முடியாது. குடியரசு கேடு தந்திடின், அதனை மாற்றி அமைத்திடும் உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. முடியரசு தவறு செய்தால் மக்கள் எதிர்த்து குரல் எழுப்பவியலாது. குடியரசு தவறிழைத்தால் மக்கள் எடுத்துரைக்கலாம், கண்டிக்கலாம், எதிர்க்கக்கூடச் செய்யலாம். அப்படிப்பட்ட குடியரசு நாட்டை ஆள்வது எளிதன்று, அதற்கான அறிவாற்றல் மிக முக்கியம். அன்று நிலவிய தேர்தல் முறைகளை தன் தம்பிகளுக்கு எடுத்துரைக்கிறார். தேர்தலில் பணம் செலவழித்தே வெற்றி பெற்றோம் என்று காங்கிரஸ் அமைச்சர் கூறுவதை சுட்டிக் காட்டுகிறார். குடியரசு என்றபோதிலும் ஆட்சியாளர்கள் தொழிலதிபர்களிடம் சிக்கிக்கொண்டால் அவர்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடவும், நீட்டிய இடத்தில் கையெழுத்திடவும் நேரிடும். இது குடியாட்சி, எங்கோ யாரோ ஒருவர் பார்த்துக்கொள்வார் என்றில்லாமல், மக்கள் நலன் காத்திட பணியாற்றும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்.