Description
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் (அ) சந்திரமோகன் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளையும், மனித வாழ்விற்கு சிறிதும் பயனளிக்காத இதிகாச புராண நாடகங்களை மட்டும்மே மக்கள் பார்க்க வேண்டியிருந்த சூழலில், சமூக அக்கறையும், சாதி பேதங்களை ஒழிக்கும் சீர்திருத்த சிந்தனைகளும் கொண்ட முத்தான கதைகளையும், சத்தான நாடகங்களையும் படைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதில் ஒன்றுதான் “சந்திரமோகன்” அல்லது “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” எனும் இந்த நாடகப் படைப்பு. இதில் மராட்டிய வீரனாக வேடமேற்று நடித்த நடிகரைப் பாராட்டி தந்தை பெரியார் அளித்த “சிவாஜி” என்ற பட்டமே, பின்னாளில் அவர் வெள்ளித்திரையில் சிவாஜி கணேசனாக அறிமுகமாகும் ஆரம்பப் புள்ளியாகும். பேரறிஞர் அண்ணா காகபட்டர் வேடமேற்று நடித்தது குறிப்பிடத்தக்கது.
பணத்தோட்டம் பேரறிஞர் அண்ணா ஒரு சிறந்த பொருளாதார வல்லுனரின் சிந்தனை கொண்டிருந்தவர் என்பதைப் பறைசாட்டுகிறது இந்தப் புத்தகம். வங்கிகள் எவ்வாறு இயங்குகின்றன, கடன்கள் எப்படி, யாருக்கு வழங்கப்படுகின்றது, தமிழர்கள் எவ்வாறு தங்கள் வாய்ப்புகளை நழுவவிடுகிறார்கள் அல்லது தமிழர்களுக்கு எவ்வாறு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது போன்றவற்றை சாமானியானும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ளார்.
நீதிதேவன் மயக்கம் புராணம், இதிகாசம் என்ற பெயரில் அறிவுக்கும், மக்கள் வாழ்விற்கும் ஒவ்வாத கட்டுக்கதைகளைச் சொல்லி சமூகத்தை ஏய்த்துப் பிழைக்கும் கும்பலின் தோலுரித்துக் காட்டுகிறது அண்ணாவின் இந்தப் படைப்பு. பழைய நிகழ்வுகளுக்கு ஆண்டவன் வழங்கிய தீர்ப்புகள் செல்லாது என்பதை நீருபிப்பதற்கான புதிய கருத்துகளைக் கொண்டு ஆண்டவன் மன்றத்தில் மறு விசாரணை நடத்தி, வாசிப்பவரின் மயக்கம் தெளியச் செய்து சிந்திக்கத் தூண்டுவதே நீதிதேவன் மயக்கம் எனும் நாடகம்.
வெள்ளை மாளிகை “வெள்ளை” மாளிகை எனத் தயங்காதே, அங்கே ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதே என் அவா எனக் கூறி தன் தம்பிகளை உள்ளே அழைத்துச் செல்கிறார் அண்ணா. இர்விங் வாலாஸ் எழுதிய “மனிதன்” எனும் புத்தகத்தையும் அதுபோன்று மேலும் பல ஏடுகளையும் வாசித்து தான் அறிந்து கொண்டவற்றை தன் தம்பிகளிடம் பகிர்ந்துகொள்ளும் முயற்சியே அண்ணாவின் இந்த வெள்ளை மாளிகை.
தீ பரவட்டும்! 43 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியிலும், சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்க பாடசாலையிலும், ஆரியச் சுவடிகளான கம்ப இராமாயணம், பெரிய புராணம் பற்றிய ஒரு உரையாடல் நடைபெற்றது. இவ்விரு நூல்களுக்கும் எதிராக சி.என். அண்ணாதுரையும், ஆதரவாக ஆர். பி. சேதுப்பிள்ளை சென்னையிலும், சோமசுந்தர பாரதி சேலத்திலும் கலந்துகொண்டு தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். இந்த சொற்போரே “தீ பரவட்டும்” எனும் இப்படைப்பாகும்.
ஏ, தாழ்ந்த தமிழகமே! 1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப்படத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவே இந்நூல்.
குடியாட்சிக் கோமான் உலக வரலாறு முழுதும் கொலை பாதகச் செயல்கள் பல செய்து மன்னராட்சி முறை ஒழிந்து குடியாட்சி முறை வந்தது. முடியாட்சியோ, குடியாட்சியோ முறை எதுவாயினும் எத்தன் ஏய்ப்பான், ஏமாளிகள் இரையாவர். ஏய்த்துப் பிழைக்கும் குடியாட்சிக் கோமான்களின் கொட்டமடக்கிட துணியும் படைப்பிது.
எல்லோரும் இந்நாடு மன்னர் ஆட்சி நடத்தத்தக்க அறிவாற்றல் பெற்று எல்லோரும் இந்நாட்டு மன்னராக திகழ வேண்டும் என விரும்பிய அண்ணாவின் படைப்பு இது.
இலட்சிய வரலாறு திராவிடர் கழகம் என்பது ஒரு அரசியல் கட்சியல்ல, சுயமரியாதை இயக்கம், பிரச்சார இயக்கம். இக்கழகம் மக்கள் அறிவுத்துறையிலும், சமுதாயத்திலும் மதத்துறையிலும், கடவுள் துறையிலும் இருந்து வரும் மடைமைகளையும், முன்னேற்றத் தடைகளையும் நீக்குவதற்குப் பாடுபடும் இயக்கம். ஆரியக் கொடுமைகளிலிருந்து மீட்டு, சாதி மத வேறுபாடுகளைக் களைந்து மக்கள் யாவரையும் ஒன்றுபட்டு வாழ வலியுறுத்தும் இயக்கம். இனி சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச் சொல் என்ற பெரியாரின் விளக்கவுரையுடன் தொடங்குகின்றது இந்த இலட்சிய வரலாறு.
ஆரிய மாயை: சுமார் 30 ஆண்டு காலம் இந்திய நிலப்பரப்பு முழுதும் உலவி, மக்களின் அன்றாட வாழ்வினை கூர்ந்து கவனித்து அறிந்தவர் பிரான்சுப் பாதிரி ஆபி டியூபா. “Hindu Manners Customs and Ceremonies” என்ற தனது நூலில் ஆரியர்களின் இயல்பினை உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறார். ஆரிய மாயையில் சிக்குண்டு கிடக்காமல் தம்மக்கள் விழித்துக்கொள்ள வேண்டுமென்ற பேரறிஞர் அண்ணாவின் ஆவல் இப்படைப்பில் வெளிப்படுகிறது.