Description
கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று பெரியார் கூறியிருக்கிறார். அது பற்றி விரிவாக விளக்குவதற்கு பேரறிஞர் அண்ணா அழைக்கப்பட்டிருந்தார். அதை மறுத்துப் பேசுவதற்கு திருவாளர் ஆர். பி. சேதுப்பிள்ளை அழைக்கப்பட்டிருந்தார்.
கலையை அழிக்கின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவற்றில் புகுத்தப்பட்டுள்ள பொய்களையும் ஆபாசங்களையுமே கண்டிப்பதாகத் தெரிவிக்கின்றார். கலை இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும் விரிந்தும் வரும் என்றும், இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும் என்றும் வாதிடுகிறார். ஆரியக்கலை என்றும் திராவிடக் கலை என்றும் தனித்தனிக் கலை உண்டு. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு இன்று ஆரியம் திராவிடர் கலை மீதும், சட்டதிட்டங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. தமிழருக்கு தேச வளமை போன்ற சட்டமோ, அல்லது குறள் நீதியோ இன்று இல்லை என்பதைப் பதிவு செய்கிறார்.
எனவே, தமிழருக்கு தமிழ்நெறி, தமிழ்முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரவல்ல கலையாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறார். மாறாக தமிழர் தம் தன்னம்பிக்கையை குலைப்பதாக இருக்கக்கூடாது என்கிறார். பல அறிஞர்களின் கூற்றை மேற்கோள் காட்டி ஆரிய திராவிடப் போராட்டக் கதையே இராமாயணம் என்று உரக்கக் கூறுகிறார்.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் கம்ப இராமாயணத்தையும் ஒப்பிட்டு தம் வாதங்களை முன் வைத்து தன் கருத்துக்கு வலு சேர்க்கிறார்.